மாந்தி தோஷம்

உங்கள் ஜாதகத்தில் “மாந்தியானவர் 3,6,10,11 ஆகிய இடங்களில் இருந்தால்,. மாந்தி அமர்ந்தால் தோஷமாக வேலை செய்யாது, மாறாக நன்மையையே தருவார் மாந்தி. காரணம் இது “ உபஜெயஸ்தானம்ஆகும்.

இந்த உபஜெயஸ்தானத்தில் மாந்தி, சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன் இருந்தால் நன்மையை மட்டுமே தருவார்கள்.

சரி யார் இந்த “மாந்தி ? இவர் சாதாரணமானவர் அல்ல. சனீஸ்வர பகவானின் மகன்.

3,6,10,11 ஆகிய இடங்களில் தோஷத்தைத் தரமாட்டார்.

அப்படியானால் எங்கு கடுமையான தோஷத்தைத் தருவார்? எங்கு ஓரளவு தோஷத்தைத் தருவார்?

லக்னத்தில் அமர்ந்த மாந்தி கடுமையான தோஷத்தைத் தருவார். மற்றும் 2, 5, 7, 8, 9, ஆகிய இடங்களில் கடுமையான தோஷத்தைத் தருவார். அடுத்து 4, 12, ஆகிய இடங்களில் ஓரளவு தோஷத்தைத் தருவார்.

உங்கள் ஜாதகத்தில் மேற்கண்ட இடங்களில் மாந்தி இருந்தால் தோஷம் என்பதை உணரலாம்.

இதில் ஒரேஒரு விலக்கு உண்டு “சிம்மத்தில் அமர்ந்த மாந்தி தோஷத்தைத் தருவதில்லை.

காரணம் இந்த மாந்தி சூரியனுக்குப் பேரன். எனவே தோஷத்தைத் தருவதில்லை.

மற்றபடி லக்னம், 2,5,7,8,9 ஆகிய இடங்களில் இருக்கும் மாந்தி தோஷத்தைத் தருவார்.

லக்னம் : லக்னத்தில் இருந்தால் வளர்ச்சி தடைப்படும். எதையோ இழந்ததுபோல் இருப்பார்கள். பலவீனமான உடல்வாகு, தவறாக முடிவெடுத்தல், முன்ஜென்ம வினை அதிகம் கொண்டவராக இருப்பார்கள்.

2 ம் இடம் : குடும்பத்தில் நிம்மதி என்பதே இருக்காது. வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இருப்பர். பணம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆரம்பக் கல்வி தடைப்படும். வாக்குறுதி தந்து வாக்கு தவறி பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள்.

5ம் இடம் : புத்திரபாக்கியத்தில் தடை, அல்லது சமூகத்தில் குடும்ப நற்பெயரை கெடுக்கும் பிள்ளை, அல்லது பயனில்லாத குழந்தை என்று குடும்பத்தில் சந்தோஷமற்ற நிலை ஏற்படும்.

7ம் இடம் : திருமணத்தடை, தன் எதிர்பார்ப்பை முற்றிலும் முறியடிக்கக்கூடிய ஏமாற்றம் தரும் துணை அமைதல், நோய் பாதிப்புள்ள துணை அமையும்.

8ம் இடம் : அடிக்கடி விபத்துகள் நடக்கும். அதிக அறுவைசிகைச்சை ஏற்படும். மொத்தத்தில் “நித்ய கண்டம், பூரண ஆயுசு என்பதாகவே அமையும்.

9ம் இடம் : தந்தையால் பயன் இருக்காது. அல்லது தந்தையின் அரவணைப்பு இல்லாமல் போகும் (தந்தை இல்லாத நிலை) அல்லது கடும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். பூர்வீகச் சொத்து அழியும் அல்லது பயனில்லாமல் போகும்.

4 ம் இடம் : சொந்த வீடு இருந்தாலும் அனுபவிக்க முடியாது. வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். அல்லது அடிக்கடி விபத்து ஏற்படுதல், பயணங்களில் எப்போதும் அசௌகரியம் உண்டாகுதல், ஏன் எதற்கு என்றே தெரியாமல் பணம் செலவாகுதல் எனும் நிலை ஏற்படும்.

12 ம் இடம் : நிம்மதி அற்ற நிலை, இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தல், அடிக்கடி மருத்துவச் செலவு, ஊர்விட்டு ஊர் மாறிக்கொண்டே இருத்தல், அல்லது யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்தல் எனும் துர்பாக்கிய நிலை உண்டாகும். இப்படி பலவிதமான தோஷங்களைத் தரும்.

இதற்கு எப்படித் தீர்வு காணமுடியும் அல்லது பரிகாரம் என்ன?

ரத்னசபை என போற்றப்படும் திருவாலங்காட்டில் மாந்தி வழிபட்ட சிவலிங்கம் உண்டு. அந்த லிங்கத்தை வழிபட மாந்தி தோஷம் நீங்கும்.

திருநறையூர் கோயில் நகரம் கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது. இங்கே, சனி பகவான் தன் குடும்பத்தோடு காட்சி தருகிறார். மனைவி நீலாதேவி, மகன்கள் மாந்தி, மற்றும் குளிகன் என காட்சி தரும் இவர்களை வணங்க மாந்தி தோஷம் நீங்கும்.

பட்டுக்கோட்டை அருகே விளங்குளம் எனும் ஊர் உள்ளது. இங்கே உள்ள சிவாலயத்தில், சனிபகவான் தம்பதி சமேதராக, குடும்ப சகிதமாக அருட்காட்சி தருகிறார். இங்கே சென்றும் தரிசியுங்கள்.

அனைத்திற்கும் மேலாக இறந்தவர்கள் உடல் அடக்கத்திற்கு உங்களால் ஆன உதவி எதுவானலும் செய்யுங்கள். மாந்தி தோஷம் இல்லாமல் செய்துவிடும். குறிப்பாக அனாதை சவ அடக்கத்திற்கு செய்யும் உதவி உங்களின் தலைமுறைகளை கடந்து காபந்து செய்யும்.

நாம் இப்போது, தத்து கொடுத்தல், தத்து எடுத்தல், ஆயுள் அரிஷ்டம், பாலாரிஷ்டம் முதலான விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்.

தத்து கொடுத்தல் : ஒருவர் தன் குழந்தையை தத்துக் கொடுத்தல் அல்லது ஆலயத்திற்கு தத்து கொடுத்து எடுத்தல் போன்ற விபரங்களைப் பார்க்கலாம்.

சில ஜோதிடர்கள் குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்து “இந்த குழந்தையை கோயிலுக்கு தத்துக் கொடுத்து மீண்டும் தத்தெடுத்துக்கொள்ளுங்கள் என பரிந்துரைத்திருப்பார். அது ஏன்?

யாருடைய ஜாதகத்திலும் “சனி+கேது இருவரும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் தத்து கொடுக்கப்பட வேண்டியவர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ஏன்? ஆயுள் காரகன் சனி. இந்த ஆயுளை அரித்து விரைவில் இறைவனடியை சேர்க்க கேது பகவான் துணை நிற்பார்,

அதற்கான பரிகாரம்தான் “தத்துக் கொடுத்தல்.” இப்படி ஆலயத்திற்கு அதாவது தெய்வத்திற்கு தத்துக் கொடுக்க அது தெய்வத்தின் குழந்தையாகிவிடும். ஆக தெய்வத்தின் குழந்தைக்கு ஆயுளைக் குறைக்கும் அதிகாரம் கிரகங்களுக்கு இல்லை. அவ்வளவு ஏன்.அந்த சக்தியும் கிடையாது.

எனவே அந்தக் குழந்தை, தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.

இப்போது சிலர் “எனக்கு இந்த அமைப்பு உள்ளது. ஆனால் நான் தத்து கொடுக்கவோ, தத்து எடுக்கவோ படவில்லை என்போருக்கு

நிச்சயமாக உங்கள் குழந்தைப் பருவத்தில் தொலைந்துபோய் கண்டு பிடிக்கப்பட்டிருப்பீர்கள். அல்லது தாத்தா வீட்டில் வளர்க்கப்பட்டிருப்பீர்கள். அல்லது பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரி காலம் வரை விடுதியில்(ஹாஸ்டல்) தங்கிப் படித்திருப்பீர்கள்.

சனி கேது இணைவு மட்டுமல்ல, லக்னத்திற்கு 8 ம் இடத்தில் கேது இருந்தாலும் ஆயுள் அரிஷ்டம் ஏற்படும்.

8ல் ராகு இருந்தாலும் ஆயுள் பாதிப்பை உண்டாக்கும்.

இதற்கான ஜாதக நிவர்த்தி ”குரு பார்வை இருந்தால் பாதிப்பு இல்லாமல் போகும்.”

குரு பார்வை இல்லாவிட்டால், ஆலய பரிகாரமே சிறந்தது,

அதிலும் முக்கியமாக... மகான்கள், சித்தர்கள் ஜீவசமாதி, வெள்ளெருக்கு விநாயகர், இவர்களை வணங்கிவந்தால் ஆயுள் அரிஷ்டத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.

மேலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருக்கடையூரில் மார்கண்டேயன் பொருட்டு ஈசனால் வதம் செய்யப்பட்ட எமதர்மன் தொடர்பு கொண்ட திருத்தலம் என்பதை தாங்கள் அறிவீர்கள்தானே. திருச்சி மண்ணச்சநல்லூரில், திருப்பைஞ்சீலியில் ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் உயிர் பெற்றார். இப்படி எமனுக்கே உயிர் மீண்ட ஆலயம் இந்த திருப்பைஞ்சீலி.

இந்த ஆலயத்தில் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று சிவ பெருமானையும், எமதர்மராஜனையும் வணங்கினால் உங்கள் ஆயுள் அரிஷ்டம் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

இன்னும் சில அரிஷ்டங்கள்:-

நீங்கள் பிறந்த கிழமையும், இந்த நட்சத்திரங்களும் ஒன்றானால் நீங்கள் பிறந்தது “பாலாரிஷ்டத்தில் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

1.   ஞாயிறு. - பரணி

2.   திங்கள். - சித்திரை

3.   செவ்வாய் - உத்ராடம்

4.   புதன் - அவிட்டம்

5.   வியாழன் - கேட்டை

6.   வெள்ளி - பூராடம்

7.   சனி - ரேவதி

இந்த பாலாரிஷ்டம் 12 வயதுவரை உடல்நலத்தை பலமாக பாதிக்க வைக்கும். ஒவ்வொரு இரவும் பகலும் உடலைப் படுத்தி எடுக்கும், ஆயுளைக் கெடுக்காது. ஆனால் ஆயுள் முடிந்துவிடுமோ என பதைக்க வைக்கும். 12 வயதுக்கு மேல் இந்த தோஷம் தானாகவே நீங்கிவிடும்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு, மற்றும் சனி ப்ரீதி மட்டுமே போதும். மற்றும் தத்துக் கொடுக்கும் பரிகாரமும் உதவும்.

மேலும் ஆண்களின் ஜாதகத்தில் குருவோடு கேது இணைந்திருந்தாலும், பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனோடு கேது இணைந்தாலும் இந்த பாலாரிஷ்டம் என்னும் தோஷம் உண்டு. இவை அனைத்திற்க்கும் மேற்கண்ட பரிகாரங்கள் செய்வது மிகுந்த நன்மையைத் தரும்.

தத்து எடுத்தல் என்பது ஜாதக பலாபலன்களை அறிந்தால்தான் விவரிக்க முடியும்.

நாம் பார்த்திருப்பது பொதுவான தகவல்களே! சுய ஜாதகத்தில் 8 ம் அதிபதி , சனி, ராகு கேது, செவ்வாய் நிலை அறிந்தால் மட்டுமே இந்த அரிஷ்டம் என்னும் தோஷத்தை விரிவாகப் பார்க்க இயலும்,

எனவே அடிக்கடி நோய் வயப்பட்டால் ஜாதகத்தில் கிரக நிலை, திசா புத்தி விபரம் அறிந்து அதற்கேற்ப தெய்வங்களை வணங்கிவர நலமான வாழ்வு அமையும் என்பது உறுதி.

கன்னம் புஷ்டியாக இருந்தால் செல்வவளம் குன்றாமல் இருக்கும்.

பெண்களின் முதுகு ஆமை முதுகு போல் இருந்தால் அளவற்ற செல்வம் சேரும்.

ஆண்களின் தொடை பருத்திருந்தால் செல்வ வளம் உண்டு.

உள்ளங்கை குழி போன்ற அமைப்பு இருந்தால் செல்வம் தங்கும்.

மூக்கு நுனி கூர்மையாக இருந்தால் குரு கடாட்சம் உடையவர். அதே சமயம் அதில் மச்சம் (மூக்கு நுனியில்) இருந்தால் யாரையும் மதிக்காத அலட்சியப் போக்கை உடையவர்.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.