நீசபங்க ராஜயோகம்

உங்கள் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய யோகக்கிரகங்கள் வலிமை அடைந்தும், தீமை செய்யக்கூடிய பகைக்கிரகங்கள் வலுவிழந்தும் இருந்தால் நீங்கள் இந்த உலகில் அனைத்துச் செல்வங்களையும் பெற்று அதிர்ஷ்டசாலியாக வாழ்வீர்கள் என்பது ஜோதிட விதி.

ஒரு கிரகம் வலிமையுடன் இருக்கிறதா அல்லது வலு இழந்து இருக்கிறதா என்பதை அந்தக் கிரகம் இருக்கும் வீட்டின் நிலையை வைத்து கீழ்க்கண்டவாறு பிரிக்கிறது வேதஜோதிடம்.

1.       உச்சம்

2.       மூலத்திரிகோணம்

3.       ஆட்சி

4.       நட்பு

5.       சமம்

6.       பகை

7.       நீசம்

மேற்கண்ட அமைப்பை வைத்து ஒரு கிரகத்திற்கு நாம் மதிப்பெண் தருவதாக இருந்தால் நீசநிலைக்கு பூஜ்யமும், பகைக்குப் பத்து மதிப்பெண்களும், சமநிலைக்கு இருபதும், நட்புக்கு நாற்பதும், ஆட்சிக்கு அறுபதும், மூலத்திரிகோணம் எண்பது, உச்சம் நூறு எனத் தோராயமாகக் கொள்ளலாம்.

ஒரு கிரகம் தனது வலிமை அனைத்தையும் இழக்கின்ற நிலை நீசம் எனப்படுகிறது.

நீசநிலையில் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரகம் தனது காரகத்துவப் பலன்களையும், ஆதிபத்தியப் பலன்களையும் தர இயலாது என்றும் ஜோதிடசாஸ்திரம் சொல்லுகிறது.

ஒரு கிரகம் நீசம் பெற்றால் அக்கிரகம் சம்பந்தமான எந்த ஒரு விஷயமும் முழுமையாக உங்களுக்கு கிடைக்காது. அந்தக் கிரகத்தால் உங்களுக்கு எவ்வித பயனும் இருக்காது என்பது இதன் உட்பொருள்.

விதி என்ற ஒன்று இருந்தால் விலக்கு என்பது இருந்தே தீரும் என்பதன்படி, ஒரு கிரகம் நீசபங்கம் பெறும் பொழுது இழந்த தன் வலுவைப் பெறுகிறது என்பதும் வேதஜோதிட விதிதான்.

அதன்படி இந்த நீசபங்க அமைப்பில் மறைந்திருக்கும் சூட்சுமம் என்னவெனில் ஒரு கிரகம் முறையான நீசபங்கத்தைப் பெறும் பொழுது அது உச்சத்தை விட மேலான ஒரு வலிமையை அடையும் என்பதே.

இது மதிப்பெண் நிலையில் 100க்கு 100 என்பதையும் தாண்டி 120 என்கிற ஒரு வினோத நிலையைப் பெறும்.

அதே நேரத்தில் இன்னொரு விளைவாக நீசபங்கம் பெறும் கிரகம் ஆரம்பத்தில் நீசத்தைத் தந்துதான் பிறகு வளர்ச்சியைத் தரும். அதாவது அந்தக் கிரகம் முதலில் ஒன்றுமில்லாத நிலையை ஏற்படுத்தித்தான் பிறகு உங்களை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.

உதாரணமாக லக்னாதிபதி கிரகம் நீசம் அடைந்து முறையான நீசபங்கம் பெற்றிருந்தால் நீங்கள் வாழ்க்கையில் முதலில் கஷ்டப்பட்டு ஒன்றுமில்லாத நிலையில் இருந்து பிறகு பிரமிக்கத்தக்க அளவில் முன்னேற்றம் அடைவீர்கள்.

அதுபோலவே நீசக்கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியதோ அதுவும் முதலில் ஒன்றுமில்லாமல் இருந்துதான் பிறகு வளர்ச்சி பெறும்.

முறையான நீசபங்கம் என்பது உச்சத்தை விட மேலான நிலை என்பதற்கு என்னால் நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

எடுத்துகாட்டாக, சூரியன் நீசம் பெற்றால் அரசுவேலை இல்லை. அரசலாபம் கிடையாது. தலைமைப் பதவியைப் பற்றிக் கனவுகூட காண முடியாது!

அரசன்என்றால் நம்மில் பெரும்பாலோருக்கு யார் சட்டென்று நினைவுக்கு வருவார்?

 

மன்னனாகும் வாய்ப்பு துளிக்கூட இன்றி இளையவனாகப் பிறந்து, மூத்த அண்ணன் கொலையுண்டதாலும், முறை அரசனான சித்தப்பன் இறந்ததாலும், வாழ்வின் பிற்பகுதியில் தற்செயலாக அரசனானவன், இந்தியாவில் இருந்த அரசர்களிலேயே வெளிநாடுகளை வென்ற ஒரே நம் தமிழ்ப் பேரரசன், ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் நினைவில் உள்ளவன், அரசர்களுக்கெல்லாம் அரசன் என்றராஜராஜன்எனும் பெயர்பெற்ற நம் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சூரியன் நீசம் பெற்ற நிலையில் பிறந்தவன்..!

சுக்கிரன் நீசம் பெற்றால் கலைத்துறையைப் பற்றிக் கனவுகூடக் காண முடியாது. நடிப்பு வராது. பொதுமக்கள் மத்தியில் புகழுடன் தோன்ற முடியாது. குறிப்பாக சினிமாவில் ஜெயிக்க முடியாது.

இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர், இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சுக்கிரன் நீசமான அமைப்பில் பிறந்தவர்.

புதன் நீசம் பெற்றால் அறிவாளியாக முடியாது. நிபுணத்துவம் இருக்காது. சிந்தனைத்திறன் சிறிதளவே இருக்கும். கணிதத்திறன் வராது. எதையும் புதிதாக கண்டுபிடிக்க முடியாது.

உலக வரலாற்றில் இதுவரை பிறந்த விஞ்ஞானிகளில் முதலாமவர் என்று போற்றப்படும் மாபெரும் விஞ்ஞானி, பிரபஞ்சம் பற்றிய உண்மைகளைக் கூறும் சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்த மேதை ஐன்ஸ்டீன் புதன் நீசம் பெற்ற நிலையில் பிறந்தவர்.

குருபகவான் நீசம் பெற்றால் ஆன்மீகத்தில் உயர்வில்லை. தெய்வ அருள் கிடைக்காது. ஆனால் தன் பக்தர்களால் தெய்வத்தின் நிலையில் வைத்து வணங்கப்படும் புனிதர், பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா குருபகவான் மகரத்தில் நீசம் பெற்ற நிலையில் பிறந்தவர்.

இதைப்போல இன்னும் நிறைய உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.

அதேநேரத்தில் இது போன்றவர்கள் முதலில் வாழ்வில் நீச நிலையில் (ஒன்றுமில்லாத நிலையில்) இருந்து பிறகு தம் துறையில் உச்சத்திற்கு சென்றவர்களே.

பெரும்பாலான ஜோதிடர்களுக்கு இந்த நீசபங்கத்தை அளவிடுவதில் குழப்பம் ஏற்படும். உனக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறது என்று ஜாதகரிடம் சொல்லுவார். கேட்பவரும் ராஜயோகத்தை எண்ணி கனவு காணும் நிலையில் அந்த தசை அவரிடம் உள்ளதையும் பறித்துக் கொண்டிருக்கும்.

சரியான நீசபங்கத்திற்கான விதிகள்

1.   நீசனுக்கு வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம்மடைந்தால்

2.   நீசக்கிரகம் பரிவர்த்தனை அடைந்தால்

3.   நீசன் வர்க்கோத்தமம் அடைந்தால்

4.   நீசக்கிரகத்துடன் ஒரு உச்சன் சேர்ந்திருந்தால்

5.   நீசன் - லக்னம் அல்லது சந்திர கேந்திரத்தில் இருந்தால்

6.   நீசனுக்கு வீடு கொடுத்தவன் சந்திர கேந்திரத்தில் இருந்தால்

7.   நீசனின் ராசியதிபதி பரிவர்த்தனை ஆனால்

8.   நீசனை இன்னொரு நீசன் பார்த்தால்

9.   நீசன் வக்கிரம் அடைந்தால்

10. நீசன் அம்சத்தில் உச்சம் அடைந்தால்

11. நீசனை நிசன் நின்ற  வீட்டின் அதிபதியே பார்த்தால் அல்லது  அந்த நீசனுடன் சேர்நதால்

12. நீசன் நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின சேர்க்கை பெற்றால்.

நீசபங்கம் என்பது என்ன? அதை எப்படிக் கணக்கிடுவது?

அதற்கு ஏராளமான விதிகள் உள்ளன. முக்கியமானவைகளைச் சொல்கிறேன்.

1.       நீசனுக்கு வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் பெறுவது.

2.       நீசக்கிரகம் பரிவர்த்தனை பெறுவது.

3.       நீசன் வர்க்கோத்தமம் பெறுவது.

4.       நீசக்கிரகத்துடன் ஒரு உச்சன் இணைவது.

5.       நீசன் லக்னம் அல்லது சந்திர கேந்திரத்தில் இருப்பது.

6.       நீசனுக்கு வீடு கொடுத்தவன் சந்திர கேந்திரத்தில் இருப்பது.

7.       நீசனின் ராசியதிபதி பரிவர்த்தனை ஆவது.

8.       நீசனை இன்னொரு நீசக்கிரகம் பார்ப்பது

9.       நீசன் வக்கிரம் அடைவது

10.   நீசன் அம்சத்தில் உச்சம் பெறுவது

இது போன்ற விதிகளில் பெரும்பாலானவற்றின்படி ஒரு நீசக்கிரகம் நீசபங்கத்தைப் பெற்று, அதாவது ஒரு நீசக்கிரகம், சந்திரகேந்திரத்தில் இருந்து, அவனுடன் உச்சக்கிரகமும் இணைந்து, நீசன் வர்க்கோத்தமும் பெற்று, நீசனாதன் சந்திர கேந்திரத்தில் இருந்து, வீடு கொடுத்தவன் பரிவர்த்தனையும் பெற்று இதுபோல அதிகமான முறைகளில் நீசபங்கம் பெற்றால், அதுவே முறையான நீசபங்கம் ஆகும்.

இதுபோன்ற நிலைகளில் மட்டுமே அந்தக் கிரகம் நீசபங்க ராஜயோகத்தைச் செய்யும். அப்போதுதான் அந்த நீசன் உங்களை தன் காரகத்துவங்களில் (செயல்பாடுகளில்) வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்வான்.

நீசபங்க ராஜயோகம் என்றால் என்ன?

"நீசம்" என்றால் வலுவிழந்த நிலை.  "பங்கம்" என்றால் பாதிப்படைந்த நிலை.  நீசம்+பங்கம் (நீசபங்கம்) என்பது நீசம் அடைந்த கோளின் நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பொருள் கொள்ள வேண்டும்.

நீசம் அடைந்த நிலையில் ஒரு கோள் இருந்தால், அதனால் எந்தப் பயனும் தர இயலாது என்பது ஆருடம் கணிப்பதில் ஒரு விதி.  அப்படியானால், நீசபங்கம் ஏற்பட்ட ஒரு கோளினால் எப்படி ராஜயோகம் தர இயலும்?

கீழ்காணும் நடைமுறையில் ஒரு கோள் நீசபங்கம் அடைந்து இருக்குமேயானால் அதனால் ராஜயோகம் ஏற்படும். அதாவது, கோள்கள் தங்களுடைய நீச ராசியில் நீச்சம் அடைந்தாலும், அந்த ராசியின் உரிமையாளர், ஆட்சியோ உச்சமோ பெற்று லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தால் இந்த நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது.

இதை தவிர இன்னும் சில வழிகளிலும் நீசபங்க ராஜயோகம் ஏற்படும் என பழமையான ஆருட நூல்கள் விளக்கிக் கூறுகின்றன.

அதன்படி, ஒரு நீசம் பெற்ற கோள் உச்சம் பெற்ற கோளுடன் சேர்ந்திருந்தாலும் இந்த யோகம் ஏற்படும்.

நீசமடைந்த கோள் லக்னத்திற்கோ அல்லது நிலவிற்கோ 1, 4, 7, 10-ல் இருந்தாலும் பயன் கிடைக்கும்.

நீசமடைந்த கோள் இருக்கும் வீட்டின் உரிமையாளர் பரிவர்த்தனைப் பெற்றாலும் , நீசமடைந்த கோள் மற்றொருவர் நீசமடைந்த கோளை பார்த்தாலும், நீசமடைந்த கோள் வக்கிர நிலையை அடைந்தாலும், என இவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டாலும் நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது என்கின்றனர்.

இப்படி, ஏதாவது ஒரு ஆருட விதியின் கீழ் இந்த யோகத்தைப் பெற்றிருந்தாலும், இந்த யோகமானது, அந்த கோளின் தசாபுக்தி நடக்கும் ஊழியில் மட்டுமே பலனைத் தரும்.

ஆருட கணிப்புகளின் படி, ஒரு நீசம் அடைந்த கோளினால் 10 விழுக்காடு வரை தான் தனது நல்ல பலன்களை சாதகருக்கு கொடுக்க இயலும்.

அதே வேளையில், அந்த நீச நிலைக்கு பங்கம் ஏற்பட்டால், அந்தக் கோள் 120 விழுக்காடு அளவிற்கு வலிமை பெறுகிறது என்கிறது ஆருட நூல்கள்.

இது அந்த உயர்ந்த அளவான 100 விழுக்காடு அளவை காட்டிலும் கூடுதலாக 20 விழுக்காடு இருப்பதால், ராஜயோகம் ஆக விளங்குகிறது.

இந்த யோகம் கொண்டவர்கள், திடீர் பணவரவு பெற்று , அதாவது அந்தக் கோளின் தசாபுத்தி நேரத்தில் பெரும் செல்வம் ஈட்டி பெயரும் புகழும் கிடைக்க வாழ்வார்கள்.

சந்திரன் நீசம், செவ்வாய்

சந்திரன் நீசம் பெற்று செவ்வாயுடன் இணைந்து நிற்றல், அவ்விடம் லக்ன சந்திர கேந்திரமாய் நின்றாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடமாய் இவ்விதம் நின்றாலும், அவ்விடத்தைக் குரு பார்த்தாலும், அல்லது இணைந்து நின்றாலும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

குரு நீசம், சந்திரன்

குரு நீசம் பெற்று லக்ன சந்திர கேந்திரமாய் நின்றாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடமாய் இவ்விதம் நின்றாலும், சனியுடன் இணைந்து நின்றாலும், செவ்வாய் நீசம் பெற்று நின்று இதனைப் பார்த்தாலும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

செவ்வாய் நீசம், சந்திரன்

செவ்வாய் நீசம் பெற்று லக்ன சந்திர கேந்திரமாய் நின்றாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடமாய் இவ்விதம் நின்றாலும், நீச குருவால் பார்க்கப் பெற்றாலும், நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

புதன் நீசம், சந்திரன்

புதன் நீசம், சந்திரனுடன் இணைந்து லக்ன சந்திர கேந்திரத்தில் நிற்பினும், நீச புதன், குருவுடன் இணைந்து நிற்பினும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

சுக்கிரன் நீசம், சந்திரன்

சுக்கிரன் நீசம் பெற்று சந்திரனுடன் லக்ன கேந்திரத்தில் இணைந்தாலும், புதனுடன் இணைந்தாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடத்தில் இணைந்தாலும், குரு பார்வை அல்லது சேர்க்கைப் பெறினும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

புதன் நீசம் பெறுகின்ற போது நீசம் பெற்றக் கோள் ஆன சுக்கிரனின் பார்வை பெற முடியாது. அதைப்போல சுக்கிரன் நீசம் பெறுகின்ற போது புதன் நீசம் பெற்றக் கோளின் பார்வை பெற முடியாது. ஏன் எனில் சூரியன், சுக்கிரன், புதன் இம்மூவரும் 90 பாகைக்குள்ளாகப் பயணம் செய்பவர்கள். எனவே இங்கே இவ்விதி பொருந்தாது. இங்கு மட்டுமே நீசனை நீசன் பார்க்காத நிலை உள்ளது.

சூரியன் நீசம், சந்திரன்

சூரியன் நீசம் பெற்று சந்திரனுடன் லக்ன கேந்திரத்தில் இணைந்தாலும், சுக்கிரனுடன் இணைந்தாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடத்தில் இணைந்தாலும், நீச சனியால் பார்க்கப் பெறினும், குரு பார்வை அல்லது சேர்க்கைப் பெறினும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

சனி நீசம், சந்திரன்

சனி நீசம் பெற்று சந்திரனுடன் லக்ன கேந்திரத்தில் இணைந்தாலும், செவ்வாயுடன் இணைந்தாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடத்தில் இணைந்தாலும், நீச சூரியனால் பார்க்கப் பெறினும், குரு பார்வை அல்லது சேர்க்கைப் பெறினும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.